எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,  நூலகத்துறையும் இணைந்து ‘புத்தகம் பேசுது’ என்ற நிகழ்ச்சி -29.08.2024

எஸ்.ஏ.கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதில் முன்னணி வகிக்கிறது. மாணவர்கள் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்த புத்தகங்களை வாசிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. அப்பழக்கம் தொடர்ச்சியான கற்றல் அனுபவத்தை மாணவர்களிடையே உருவாக்கும். அதைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வண்ணம் எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும்,  நூலகத்துறையும் இணைந்து ‘புத்தகம் பேசுது’ என்ற நிகழ்ச்சியை ஆகஸ்ட்  29,  2024 அன்று நண்பகல் 12 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் நடத்தியது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் இ.கே.தி. சிவகுமார் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

     மாதந்தோறும் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாகப்  பாரதியார் கவிதைகள் மற்றும் பாரதிதாசன் கவிதைகள் ஆகிய இரண்டு நூல்களை எட்டு மாணவர்கள் விமர்சனம் செய்து உரை நிகழ்த்தினர். பாரதியார்,  பாரதிதாசன் ஆகியோர் கவிதைகளில் மூழ்கி முத்தெடுத்த சிந்தனைகளை அவையின் முன்வைத்தனர். சிறப்பு விருந்தினர் மாணவர்களின் நூல் விமர்சனத்தை மகிழ்ச்சியாகக் கேட்டு ரசித்ததோடு, நூலின் முக்கியத்துவம், வாசிப்புப் பழக்கத்தால் உண்டாகும் அறிவு நுகர்வு, நூல்களை வாசித்துத்  தாம் பெற்ற நுண்ணறிவு ஆகியவற்றை மாணவர்களின் முன் பகிர்ந்து, பல்துறை நூல்களைப் படிப்பதற்கு மாணவர்களை வலியுறுத்தினார். பல நூல்களைப் பயின்று மிகச்சிறந்த கற்றல் அனுபவத்தைப் பெற மிகப்பெரும் உந்துசக்தியைத் தருவதாக இந்நிகழ்ச்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.